பக்கங்கள்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே



அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

...என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..

பிழைக்கத் தெரியாத புறம்போக்குகள்தான் இனியும் வன்னியில் வாழ்வார்கள்..முப்பத்தைஞ்சு லச்சத்துக்கும் மேலான தமிழ்மக்களிற்கு வன்னியிலையிருந்த வெறும் மூண்டு லச்சம் மக்கள் உங்களை பலி குடுத்தாவது தமிழீழத்தை எடுத்திடலாமெண்டு கனவுகண்டம்..அந்த கனவை நீங்கள் கலைச்சுப் போட்டியள்..நாங்கள் உங்களிற்கு என்ன குறை விட்டம்..ஆனையிறவு விழுந்த கையோடையே 50 யுரோவை இயக்கத்திற்கு குடுத்துப் போட்டு அரைப் போத்தல் வி்ஸ்கியை யையும் அடிச்சுப்போட்டு விசிலடிச்து மகிழ்ந்தனாங்கள்..அடுத்ததாய்யாழ்ப்பாணமும் பிடிக்கவேணுமெண்டுதானே காசை காசெண்டும் பாராமல் ஆயிரம் இண்டாயிரம் எண்டு வட்டிக்கும் கிரெடிட்டும் எடுத்து குடுத்தனாங்கள்...இப்ப அந்த வட்டி கட்டேலாமல் நாங்கள் ஓடித்திரியிறம்..ஆனால் அதை வாங்கினவை AUDI காரிலை ஓடித்திரியினம் எண்டிறது வேறை கதை...இப்பிடியெல்லாம் செய்து போட்டு யாழ்ப்பாணம் விழேக்குள்ளை அடிக்கிறதுக்கெண்டு விலை கூடின சிவாஸ்..விஸ்க்கியையும் வாங்கி வைச்சிட்டு..கிளாலியிலை அடி தொடங்கேக்குள்ளை கிளாசை கழுவினால் கெக்குவில் கோண்டாவில் தாண்டேக்குள்ளை கோழிப் பொரியல் ..பலாலி விழேக்குள்ளை பாதிப் போத்தல் முடிஞ்சிடும்..காரைநகர் கடற்படைத்தளம் அடிக்கேக்குள்ளை கோமாவுக்கு போனால் காத்தாலை எழும்பி தலையிடியோடை தமிழ் தேசிய ஊடகங்களை பாத்தால் யாழ்ப்பாணம் விழுந்திட்டுது தமிழீழம் கிடைச்சிட்டுதெண்டு ( எங்களிற்கு யாழ்ப்பாணம் மட்டும்தானே தமிழீழம்)செய்தியள் வருமெண்டு நாங்கள் போட்டு வைச்சிருந்த திட்டமெல்லாம் அடிச்ச தண்ணி மாதிரியே முறிஞ்சு போச்சுது..ஆனாலும் என்ன செய்ய வாங்கி வைச்சிருந்த விலை கூடின சிவாசை முள்ளி வாய்க்கால் முடிஞ்ச கவலையை நினைச்சு அடிச்சாச்சு..வாங்கின போத்தல் வீண் போகேல்லை.. இப்பிடியே எங்களை நீங்கள் பேக்காட்டி போட்டீங்கள்..பரவாயில்லை ஆனால் இனியாவது நீங்கள் எங்கடை ஆக்கினையளிற்கு ஆளாகாமல் நிம்மதியாய் இருந்கிறதெண்டால் என்னாலை முடிஞ்ச சில யோசனையளை மட்டும்தான் சொல்ல முடியும்..

ஆலோசனை 1)
ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு அகதியாய் வந்து குடியேறுங்கோ.பிரச்சனை தீர்ந்திடும்..அதுக்கு உங்களிட்டை பணவசதி இருக்காது எனவே

ஆலோசனை 2)

நீங்கள் திரும்பவும் வட்டுக் கோட்டையிலையோ அல்லது அதுக்கடுத்த அராலியிலையோ ஒரு மேடையை போட்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேத்தலாம்..


தீர்மாம் 1)

புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ


தீர்மானம் 2)

புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ ….

.கப் சிப்..சத்தம் வாராது


அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...அதே நேரம் இஞ்சை சும்மாயும் இருக்கமாட்டம்..இருக்கிறார் எண்டும் இல்லையெண்டும் கட்டுரையள் வந்துகொண்டிருந்தாலும்..அவர் இருந்த காலத்திலை அவரை முருகன் எண்டனாங்கள் இப்ப அவரை யேசுநாதராக்கிப் போட்டம்...இனி அல்லே லூயா என்றபடி அதைவைச்சு பாட்டெழுதி சிடி அடிச்சசு விக்கிற திட்டத்திலை இருக்கிறம்..பல்லாயிரம் சிடி வித்தோ..கரப்பட்டு கலண்டர் வித்தோ புலத்திலை தேசியத்தை வாடவிடாமல் வளர்த்துக்கொண்டுதான்இருப்பம்..


கடிதத்தை முடிக்க முதல் கடைசியாய் ஒரு விசயம்.. எங்களுக்கு முல்லைத் தீவு முத்தையன் கட்டிலை 3 ஏக்கர் காணி இருந்தது (சிறிமா காலத்திலை கள்ள உறுதி முடிச்சதுதான்) அதுகளின்ரை எல்லை கல் இப்ப இருக்கோ இல்லையோ தெரியாது..அதை பாக்கிறதுக்கு இந்த சமர் லீவுக்கு சிறீலங்கா வாறதுக்கு ஏயார் லங்காவிலை றிக்கெற்போட்டு வைச்சிருக்கிறன்..ஒரு கஸ்ரமும் இல்லாமல் கட்டுநாயக்காவை விட்டு வெளியேனால் கதிர் காமகந்தனிட்டை போய் மொட்டையடிக்கிறதாய் வேண்டுதல் வைச்சிருக்கிறன்..மொட்டையடிக்கிறதுக்கு என்ரை மண்டையிலை மயிர் இல்லை அதாலை எனக்கு பதிலா உங்கை யாராவது மொட்டையடிக்க சம்மதித்தால் அவரிற்கு 50 தோ 100 அவரின் மண்டையின் அளவைப்பார்த்துத் தராலம்..

புலம்பெயர் தமிழரின் தாகம்.தமிழீழத் தாயகம்

நன்றி
ஃ.சாத்திரி
தலைமைச் செயலகம்
தமிழீழம்(பிரான்ஸ்)

வியாழன், 21 ஜனவரி, 2010

"தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது"?



தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது? தெளிந்த புத்தியால் மக்களை வழி நடத்தலாமே!

  • தமிழ் நெற் தொடர்ந்தும் தன் அறிவுக்குப் பொருந்தாத வகையில் செயற்பட்டு வருகிறது. அதன் ஆசிரியர் குழு எமது அறிவுச் சமூகத்தில் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ள நபர்களைக் கொண்டிருப்பதால் தான் பல வெளி நாட்டு ஊடகங்களின் வரவேற்பையும் சிங்கள அரசுகளின் வெறுப்பையும் பெற்றதோடு தமிழ் மக்கள் சார்பாக உள்ள நியாயப் பாடுகளை உலகறியச் செய்து வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைமை வன்னியிலிருந்து மறைக்கப் பட்ட நாளில் இருந்து தமிழ் நெற் தனது நிதானத்தையும் நேரிய விமர்சனப் பார்வையையும் இழந்து விட்டது போன்ற தோற்றப்பாடு தெரிகிறது. உண்மையைச் சொல்வதானால் இது போன்ற பிறழ்வுகள் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர் அமைப்புகளில் ஏற்பட்டுவிட்டன:

  • நல்ல வேளையாக பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலைமை ஓரளவு சீர்செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சுவிஸ் உட்பட ஏனைய நாடுகளில் நிலைமை கவலை தருவதாக உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் தமது விருப்பு வெறுப்புகள் மற்றும் மன முரண்பாடுகளை வெளிப்படுத்தும் ஆர்வமும் அவசரமும் முட்கம்பி முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்ல முடியாத அளவு அவலங்களைச் சந்தித்து வரும் நிலை பற்றிய கரசனையில் எள் அளவும் காட்டுவதில்லை.

தமிழ் மக்களுக்கு எல்லாவித உரிமைகளும் அடிப்படை வசதிகள் வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை இந்திய அரசுகளும் அவற்றின் பிரச்சார முகவர்களும் தென்னாபிரிக்காவில் இடம் பெற்றது போன்ற நல்லெண்ணம் நல்லிணக்க ஆணைக் குழு பற்றிப் பேசும் அநியாய அவலம் அரங்கேறுகிறது.

  • இவை எதுவும் தமிழ் மக்களுக்காகப் போராடிய போராடிப் பல்லாயிரம் மாவீரர் செய்த தியாகங்களுக்கு உரிமை கோரும் அமைப்பின் உள்ளுர் தலைமைகளுக்கு தெரியாத அளவுக்கு அவர்களின் கவனம் உட்பூசல் குளறுபடிகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது. தாமே தமிழினத்தின் ஏக போகப் பிரதிநிதிகள் என உலக நகர வீதிகளிள் தாமும் கூவி எம்மையும் கூவ வைத்தவர்கள் இன்று ஈழத்து மக்கள் அவலத்தை தமக்கிடையே உள்ள பதவிப் போட்டிகளால் கேட்பாரற்ற நிலைக்குத் தள்ளிவிட்டனர்.

  • கே.பி கைதாவதற்கும் இவர்களுக்குள் உள்ள பூசலே காரணம் என்ற செய்திகளும் இன்று அவரால் நியமிக்கப் பட்ட உருத்திரகுமாரன் மீது காட்டப்படும் சிலரது வெளிப்படையான வெறுப்புகளும் கண்டனங்களும் உலகின் தலைசிறந்த விடுதலை அமைப்பின் தலைகீழ் நிலையைப் படம் போட்டுக் காட்டுகின்றன.

இவை போன்ற செயற்பாடுகள் ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் நிறைவே உண்டு. கடந்த அரச அதிபர் தேர்தலில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்காது புறக்கணிக்கச் செய்தது மகா தவறு எனப் புலிகளின் தயவால் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக வந்த சம்பந்தன் கூறினார். இது போன்றே 1930ல் யாழ்பாண வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் அன்றைய தேர்தலைப் புறக்கணித்தனர்.

அதனைத் தவறு என ஜீ.ஜீ. 1947ல் 50க்கு 50 என்ற குரல் எழுப்பி தேர்தலில் வெற்றியும் பெற்றார். அவரது கொள்கை மூலம் சிறுபான்மை மக்களும் பெரும்பான்மை மக்களுக்குச் சமமான அளவு அங்கத்துவம் பெற்று சிங்கள இனவெறியைக் கட்டுப் படுத்த முடியும் எனவும் நம்பப் பட்டது. ஆனால் அமைச்சுப் பதவி ஆசையால் 50யும் விட்டு இந்திய வம்சாவழித் தமிழரையும் நடுக் கடலில் விட்டார்.

சமஷ்டி ஆட்சி கேட்டுச் செல்லவா ஜீ.ஜீ.விட்ட குறையை தொட்டுத் தூக்கி அதன் மூலம் தமிழருக்கு ஒரு சம வாழ்வு கிடைக்கும் எனப் போராடினார். ஆனால் அப்போதும் ஜீ.ஜீ. சமஷ்டி ஆட்சி முறையைக் கடுமையாக எதிர்த்தார். ஏன் என்றால் அது எவருடைய சரக்கு அல்ல என்பதால். அதுமட்டும் அல்ல தமிழருக்குச் சமஷ்டி கிடைப்பதானாலும் அதுவும் தன்னாலே மட்டுமே முடியும் என மேடைகளிலும் முழங்கினார்.

  • ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே ஜீ.ஜீ. செல்வாவோடு சேர்ந்து தனித் தமிழ் ஈழத்துக்கான வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் இணைந்தது விவேகமா?

  • விதியின் சதியா?

1952 முதல் 1976 வரை ஜீ.ஜீ. செல்வாவை எதிர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டு அதன் மூலம் தமிழினம் படு மோசமான நிலைக்கு உள்ளாகக் காரணமாக நடந்தார். இத்தனைக்கும் அறிவு புலமை ஆளுமை என்பவற்றில் அவருக்கு ஈடாக ஒரு சிலரைக் கூட எவராலும் அடையாளப் படுத்த முடியாத அளவு உயர்ந்தவர். ஆயினும் யாருக்கு என்ன பயன்?

இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என எவராலும் சரியாகக் கூற முடிந்தால் நாம் தமிழ் நெற் ஆசிரிய குழுவுக்கும் அதனது சார்பான அறிவு ஜீவிகளின் செயற்பாடுகளுக்கும் காரணம் கண்டு பிடித்து விடலாம். இங்கே காரண காரியமல்ல எமது முக்கிய கவனிப்பு. எதை இழந்தோம் எதைப் பெற்றோம் என்பதே பார்க்கப்பட வேண்டும்.

1905 முதல் யாழ் வாலிபர் சங்கம் தமிழீழத்துக்கான விடுதலைக் குரலைச் சிங்களத்துக்கு முன்னரே எழுப்பியது. முதலில் விழித்துக் கொண்ட எமது இனம் படிப்படியாக ஏமாற்றப்பட்டு இன்று எழுதப்படாத கொத்தடிமைகள் ஆக்கப் பட்டுவிட்டோம் என்பதே எமது அரசியல் வரலாறு. இந்த உண்மையை தமிழ் நெற் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் உணராத வரை எம் இனத்துக்கு மீட்சியே கிடையாது.

அன்று சமஷ்டியா சமத்துவமா என்ற கூச்சலில் சுந்தரலிங்கம் எழுப்பிய ஈழ தேசக் குரல் அடங்கி அழிந்தது. பின்னர் வ.நவரத்தினம் எழுப்பிய சுயாட்சிக் கோரிக்கையின் குரல்வளை நசுக்கப்பட்டது. இவற்றின் பின்னணியில் இருந்தது சிங்கள அரசு அல்ல தமிழரின் பட்டிமன்ற முறை அரசியல் பகைமைகளே.

அதே வழியில் இன்று வட்டுக் கோட்டையா தேசம் கடந்த அரசா என்ற முரண்பாடு காரணமாக தேசம் கடந்த தமிழீழ அரசம் அதன் செயற் பாட்டாளர்களும் சில தமிழ்ப் புத்தி(?) ஜீவிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பது நமது இனம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பதையே காட்டுகிறது.

  • 15.01.10ல் தமிழ் நெற் தேசம் கடந்த தமிழீழ அரசின் அறிஞர் குழுவின் அறிக்கை பற்றி இரு கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த விமர்சனம் நேர்மை அற்றது என்பதைப் பார்க்கும் முன்னர் ஒன்றைத் தெளிவு படுத்துவது நல்லது எனக் கருதப்படுகிறது. தூர நின்று விமர்சிக்கும் உரிமை கொண்ட எவருக்கும் உள்ளே சென்று சரியாகச் செயற்பட உதவ வேண்டிய விடையமாக இது பார்க்கப்பட வேண்டும்.

விடுதலைப் போராட்டம் ஈழத்தில் பிறந்த எந்த ஒரு இஸ்லாமிய, கிருஸ்தவ இந்து மற்றும் இறை நம்பிக்கை மத நம்பிக்கை இல்லாதவனுக்கும் சொந்தமானது. எனவே எதுவாயினும் சேர்ந்து செயற்பட உரிமை உண்டு அதனை எவரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அதனை ஆதாரத்துடன் மக்கள் முன்வைத்து நீதி கேட்கும் உரிமையும் உண்டு. இதனைப் பயன்படுத்த தமிழ் நெற் குழுமத்துக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் என்ன தடை என்பதை மக்கள் முன் வைக்க வேண்டும்.

  • அறிக்கைக்கு எதிராக முதலாவதாக வைக்கப்பட்ட விமர்சனம் அது ஒரு வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயற்பட எத்தனிக்கிறது என்பதாகும். மக்களால் வாக்குப் பதிவு மூலம் தெரிந்தெடுக்கப் படுபவர் மக்களின் ஆணைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ள சபை எப்படி வெளிச் சக்திகளின் கைப்பாவையாக முடியும்?

  • வெளிநாட்டுச் சக்திகளின் நல் மதிப்பையும் ஆதரவையும் பெறும் வகையில் இயங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி கைப்பாவை என்பதாக அமையும்?

  • வெளி நாடுகளில் இயங்கும் இந்த அமைப்புக்கு இந்த இரண்டும் அடிப்படைத் தேவைகள் என்பது புரிய வில்லையா?

இரண்டாவது கண்டனம் ஒரு உத்தேச மாதிரி அரசமைப்பை கொடுத்து அதனைப் பிரதிநிதிகளை ஏற்கப் பணிக்காமல் அவர்களிடமே விட்டுள்ளமை ஏற்க முடியாது என்கிறது. எந்த நாட்டிலும் பிரதிநிதிகள் அடந்கிய அரசமைப்புச் சபைதான் மூல வடிவை உருவாக்கும். அதற்கான சட்ட வடிவம் சட்ட வரைஞர்களால் மேற் கொள்ளப் படும். இதுவே ஜனநாயக நடைமுறை.

இலங்கையில் மட்டும் ஸ்ரீமாவும் ஜே.ஆரும் தாமே தமக்கேற்றபடி அரசமைப்பை வரைந்து விட்டு அதனைப் பொம்மைப் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றினர். அதன் பலாபலன்கள் பரம்பரை பரம்பரையான குளறு படிகளுக்கும் அழிவுகளுக்கும் வழி செய்துள்ளதை நாம் காண்கிறோம். இத்தகைய நடைமுறையையா தமிழ் நெற் குழுமம் விரும்புகிறது?

யாரும் கரம் கொடுத்து தேரை இழுக்க முன்வாருங்கள் கட்டை போட்டுக் கடையாணியை உடைக்காதீர்கள்.

- த.எதிர்மன்னசிங்கம் -

www.infotamil.ch

பாரிஸ் தமிழ் நியூஸ் வழங்கும் முன்னோட்டம்....


எதனையும் சுவையாக கொடுத்தால்தான் அது எல்லோருக்கும் உறைக்கும்.
அந்தவகையில் பாரிஸ் தமிழ் நியூஸ் வழங்கும் முதல் அடி இது.

விரைவில் விருதுகள் அறிவிக்கப்படும்...
வழங்கப்படும் விருதுகள் ஊடாக இவர்களின் செயற்பாட்டுத் திறனை
நீங்கள் இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும்...

புதன், 20 ஜனவரி, 2010

நாங்கள் யார் ?

நாங்கள் யார் ?
நிச்சயம் உங்கள் மனங்களில் கேள்வி எழும்.
இந்த இணையம் ஏன் இப்போது அவசியம் ? எப்படி இதில் வரும் செய்திகளை
நம்புவது ? இவ்வாறு பல கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயல்பு.

முள்ளிவாய்களுக்கு முன்பின்னுமாக தேசியத்தின் பெயரால் பாரிஸ் மண்ணில்
அரங்கேற்றப்படும் நாடங்களை அதற்கு பின்னாலும் முன்னாலும் இயங்குகின்ற
நபர்கள் குறித்தும் மக்கள் முன் வெளிக்கொணர வேண்டிய காலம் வந்துவிட்டது.

- கேபி முதல் பலர் துரோகிகள்...

- தலைவர் உயிருடன் உள்ளார்...

- வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு....

- மக்கள் பேரவை உருவாக்கம்....

என பல திருகுதாளங்கள் அவசரகதியில் இந்த தேசிய வியாபாரிகளால்
முன்வைக்கப்படுகின்றன.

தாங்கள் நடாத்துகின்ற..சார்புடைய ஊடகங்கள் ஊடகாவும்
தேசியத்தின் பெயரால் உருவாகிய சங்கங்கள் பிற கட்டமைப்புக்கள் ஊடாகவும்
பொது அரங்க நிகழ்வுகள் வழியேயும் என பல வழிகளில்
மக்களை ஏமாற்றி மாயைத் திரைக்குள் வைத்திருக்க இவர்கள் முனைகின்றனர்.

விடுதலையின் பெயரால் சேர்திருக்கின்ற பணத்தையும்
கிடைத்திருக்க பதவிகளை(?) தக்க வைத்துக் கொள்ளவும் என
பல உள்நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இவர்கள் தேசிய முத்திரையுடன்
மக்களை ஏமாற்றுவது மட்மல்லாது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் விடுதலை அமைப்பையும்
இவர்கள் இனியும் சேதப்படுத்துவதை-இழுவுபடுத்துவதை
அனுமதிக்க முடியாது.

இவர்களின் உண்மை முகங்களையும் உள்நோக்கங்களையும் வெளிக்கொணரவே
இத்தளம்.

நாங்கள் யார் என்பதனை காலம் உங்களுக்கு விரைவில் உணர்த்தும்.
அதுவரை வரும் செய்திகளை மையப்படுத்தி இவர்களையும்-சம்பவங்களையும்
உற்று நோக்குங்கள்

உங்கள் கூரிய பார்வைக்கு முன்னால் இவர்களின் பொய் முகம் உங்களால் உணரப்படும்..

எதிர்வினையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

நன்றி.